
ஒவ்வொரு மனிதரும் நான் சுடர்விடும் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என்று நாள் முழுவதும் நம்பியபடி வாழ வேண்டும். மாறாக நான் ஆரோக்கியத்தை இழந்துவிட்டேனே என்ற தகவலை மனதுக்குக் கொடுத்தால் அது உடலுக்கு எதிரியாகிவிடும். மறந்துவிடாதீர்கள் மனமே ஆரோக்கிய வாழ்வின் அருமருந்து.
மருத்துவர் தரும் மருந்துகளுக்கு அமைவாக உடல் தேறுகிறது என்ற கருத்தை வழங்கி, உடலைச் சுகப்படுத்த வேண்டும். அதற்கு தடையாக மனத்தையும் அறிவையும் பயன்படுத்தினால் மருத்துவத்தால் பக்கவிளைவே உண்டாகும்.
உடம்பு எந்த நோயையும் வென்று தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. அது தினமும் புதிதாக மாறுவதால் தான் உயிர் வாழ்கிறது. அந்த மாற்றம்தான் உயிர் அது நிற்பதுதான் மரணம். எப்போதுமே புதுப்பித்தலுக்கு இடையூறாக மனம் இருக்கும், அதை உணர்ந்து மனதைச் சரிசெய்து வாழ்வதே வாழ்க்கையின் வெற்றிக்கான அடிப்படை.
நமது உடம்பைப் பிடித்திருந்த நோய்கள் எல்லாம் அகன்று, எப்படி இளமையாக இருக்க வேண்டுமென நினைக்கிறோமோ அந்தக் காட்சியை மனத்திரையில் காண வேண்டும். கண்டால் அந்தக் காட்சி படிப்படியாக நிஜமாகக் காண்பீர்கள்.
உடல் இறை சக்தியின் இருப்பிடம் அதை வருத்துதல் கூடாது, இழிவு செய்யக்கூடாது. அது நல்ல முறையில் செயலாற்ற என்னவெல்லாம் வேண்டுமோ அதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்கிறார் திருமூலர்.
உடலின் ஒவ்வொரு உறுப்பும் இலகுவாக, லேசாக உள்ளது என்ற நிலையில் அவற்றை வைத்திருக்க வேண்டும். உடலை மறந்து பணியாற்றும் நிலை இருந்தால் அதுவே நலமான நிலை.
ஒவ்வொரு நோயாளியும் தனக்கான சொந்த மருத்துவரை தனக்குள்ளே வைத்திருக்கிறான். அதை அறியாத காரணத்தால்தான் தம்மிடம் வருகிறார்கள் என்று உலகப் புகழ்பெற்ற மருத்துவர் ஒருவருடைய வாழ்க்கைக் குறிப்பு கூறுகிறது.
உங்களைப் பார்த்தால் முதுமையாக இருக்கிறது.. அடடா நோயாளியாக மாறிவிட்டீர்கள் என்று மோசமான கருத்துக்களை மற்றவர்களை நோக்கி துப்பக்கூடாது. குப்பைத் தொட்டிக்குள் போடும் அருவருப்பான வார்த்தைகளை மற்றவரை நோக்கி உழிழக்கூடாது. அப்படிச் செய்தால் பாதிக்கப்படுபவரை விட உங்கள் மனமே அழுக்குக் கூடையாகும்.
மற்றவர்களை நோக்கி தகாத தூஷண வார்த்தைகளை சொல்லித் திட்டிய எவரும் தன்னளவில் நலமாக இருந்தாக சரித்திரம் கிடையாது. ஆகவே நல்ல வார்த்தைகளை பேசுங்கள் நீங்கள் நல்லவர்களாக மாறுவீர்கள். நாகாஸ்திரம் என்பது நாக்கில் இருந்து வரும் நஞ்சு தடவிய வார்த்தைகளே என்பதை உணர வேண்டும்.
தீமை தரும் வார்த்தைகளை ஒரு காலமும் உணர்ச்சி வசப்பட்டு சொல்லக்கூடாது, சொன்னால் இதயத்தின் ஆழத்தில் விழுந்து அது தீமைகளை விளைவிக்கும்.