மகான்கள் அருளிய பொன்மொளிகள்

சுவாமி கமலாத்மானந்தர் நற் சிந்தனைகள்
* புலனடக்கமும், ஆன்மிக சாதனைகளும் நம் வாழ்வில் இணைந்திருக்க வேண்டும். இவை இரண்டும் இல்லாத நிலையில் ஆன்மிக அனுபவங்கள் ஏற்படுவதற்கு வழியே இல்லை. வேலை செய்தால் தானே கூலி கிடைக்கும். வேலையே செய்யாதஒருவன் கூலியை மட்டும் எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.

* மனிதன் பிறருக்குப் பரோபகாரமாகவும், நல்லொழுக்கங்களுடன் வாழ்ந்து தவத்தில் சிறந்து விளங்கி,இறுதியில் இறைவனின் திருவடியில் இரண்டறக் கலப்பதே வாழ்வின் நோக்கமாகும்.

* எந்த அளவிற்கு உள்ளம் தூய்மையாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஒருவனிடம் மனச்சாட்சியும் விழிப்புடன் இருந்து அவனை நல்வழியில் செலுத்திக் கொண்டிருக்கும். அதனால் மனமே குருவாக இருந்து நமக்கு வழிகாட்ட வேண்டும்.

* ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது அவ்வையின் அமுத வாக்காகும். வெளியில் ஆலய வழிபாடு செய்வதோடு திருப்தி கொள்ளாமல் இதயத்தில் இருக்கும் கடவுளை அறிவதே நம் பெரியோர்களின் நோக்கமாகும்.

* இறைவனை உள்ளத்தில் உண்மையாகவே ஆராதிக்கத் தொடங்கினால், நான் என்ற அகந்தை எண்ணம் அழிந்து விடும்.ஒளி வந்தவுடனேயே இருள் நீங்குவதுபோல, இறைவன் இருக்கும் இடத்தில் தான் என்னும் அகந்தை நிற்க முடியாது.

சாய்பாபா அருளிய நற் சிந்தனைகள்
* எண்ணியது நிறைவேறாவிட்டால் மனம் ஒடிந்து போய்விடக்கூடாது. ஒருவேளை நம் ஆசை தவறானதாக இருக்கலாம். அது கடவுளுக்கு விருப்பமானதாகஇல்லாமல் போனாலும் அது நிறைவேறுவதில்லை.

* இதயத்திலிருந்து இரண்டு எண்ணங்களை அகற்றி விடுங்கள். நமக்குப் பிறர் செய்த தீமைகளை மறந்துவிடுவதோடு மன்னிக்கவும் வேண்டும். மற்றொன்று நாம் பிறருக்குச் செய்த நன்மைகளை மறந்துவிட வேண்டும்.

* ஆசைகளை வளர்த்துக் கொண்டே போவதால் நிம்மதியை இழக்கிறோம். வாழ்க்கைப்பயணத்தில்,ரயில் பயணம் போல சுமைகளை குறைத்துக் கொண்டால் நிறைவான சுகத்தைப் பெற்று மகிழலாம்.

* குற்றம் குறையில்லாத பொருள் இல்லை. துன்பக் கலப்பு இல்லாத இன்பம் இல்லை. அகம்பாவச் சுவடற்ற செயல் இல்லை. எனவே, தூய உள்ளத்தோடு பற்றற்ற தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவே துன்பத்தைப் போக்கும் வழி.

* வாழ்வில் தடைகள் ஏற்படும்போது தான் நமக்கு அதிகப்படியான தைரியம் தேவைப்படுகிறது.மனவுறுதி உள்ளவர்கள் எந்த தடையையும் தாண்டி சாதனை புரிகிறார்கள்.

 திருக்குர்ஆன் சொல்லும் நற் சிந்தனைகள்
* (இந்நயவஞ்சகர்கள்) இறைவனையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்றுகின்றனர்.ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரே அன்றி வேறில்லை;எனினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை. அவர்களுடைய நெஞ்சங்களில் நோயிருக்கிறது.
(திருக்குர்ஆன்2:9)

* ''பூமியில் குழப்பம் விளைவிக்காதீர்'' என அவர்களிடம் சொல்லப்பட்டால்,''நிச்சயமாக நாங்கள் சீர்திருத்தம் செய்பவர்களே!'' என அவர்கள் கூறுகிறார்கள்-எச்சரிக்கை! நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பவாதிகளாவர்.(திருக்குர்ஆன் 2:11,12)

* (நபியே) இந்நயவஞ்சகர்கள் பேச ஆரம்பித்தால் நீர் இவர்களுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டே இருந்து விடுவீர். ஆனால், உண்மையில் இவர்கள், சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டைகளைப் போன்றவர்கள் (எதற்கும் உதவாதவர்கள்).இவர்கள் ஒவ்வோர் உரத்த சப்தத்தையும் தங்களுக்கு எதிரானதாய் கருதுகின்றனர். இவர்கள் தாம் கடும் பகைவர்களாவர்.(திருக்குர்ஆன் 63:4)

(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)


ராமானுஜர் நற் சிந்தனைகள்
*கடவுளின் பக்தர்களுக்குப் பணிபுரிவதால் தான் கடவுளை அடைய முடியும் என்பதை உங்கள் இருதயத்தில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

* கடவுளுடைய பக்தர்களுக்குப் பணி செய்யத் தன்னையே எவன் தியாகம் செய்யாமல் இருக்கிறானோ,அவன் சிறந்தவனாக இருந்தாலும் அழிந்து விடுவான்.

* தன் உறவினர்களை எப்படி நேசிக்கிறீர்களோ அவ்வாறே கடவுளின் பக்தர்களைப் பாடி மகிழ வேண்டும்.

* காலையில் எழும்போது ஆன்மிகச் சொற்களை உச்சரித்துப் பழக வேண்டும்.

* கடவுளுக்கு முன்னால், ஆசிரியருக்கு முன்னால், கடவுளின் பக்தனுக்கு முன்னால் காலை நீட்டித் தூங்குதல் கூடாது.

* கோயில், விமானம், கோபுரம் ஆகியவற்றைக் கண்டதும் மரியாதையுடன் தலைவணங்குதல் வேண்டும்.

* ஒருவனுடைய பிறப்பைப் பற்றியோ, தொழிலைப் பற்றியோ எண்ணாமல் அவனுடைய கொள்கைகளைப் பின்பற்றி பணிவிடை செய்வதே மேலானதாகும்.

* நல்ல ஒழுக்கமும், உயர்ந்த பக்தியும் கொண்டவர்களிடம் இருந்து மட்டும் உணவைப் பெற்று மகிழுங்கள்.ஒரு கடவுள் வணக்கமே மேலானது.

நன்னிலம் வைத்தியநாத தீட்சிதர்-நற் சிந்தனைகள்
பெரியவர்களிடம் ஆசி பெற சில விதிமுறைகளை தர்ம சாஸ்திரம் வகுத்துள்ளது.

* கடவுளை வணங்கிக் கொண்டிருப்பவர், தியானம், ஜபம் செய்பவர், தூங்கிக் கொண்டிருப்பவர்,குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவர்களை நமஸ்காரம் செய்யக் கூடாது.

* கைகளில் அர்ச்சனைத் தட்டு, பூ ஆகியவற்றை வைத்துக் கொண்டு ஆசி பெறவோ, வணங்கவோ கூடாது.

* வயதில் மூத்தவர்கள் அமர்ந்திருக்கும் திசையை நோக்கி கால்களை நீட்டி நமஸ்காரம் செய்யக்கூடாது.

* சூரியன் இருக்கும் திசையில் கால்களை நீட்டிக் கொண்டு நமஸ்காரம் செய்யக் கூடாது. ஏனெனில்,சூரிய மண்டலத்தில் அனைத்து தெய்வங்களும் இருக்கிறார்கள்.

* உறவினர் இறந்ததற்காக துக்கம் அனுஷ்டிக்கும் நாட்களில் யாரையும் நமஸ்காரம் செய்யக்கூடாது.பிறரால் செய்யப்படும் நமஸ்காரத்தை ஏற்றுக் கொள்ளவும் கூடாது.

திரு.வி.க நற் சிந்தனைகள்
* மனிதராகப் பிறந்தவர் எல்லாம் மனிதராக மாட்டார். இயற்கையை ஒட்டி வாழும் தெய்வீக வாழ்க்கையே பயனுடையதாகும். தன்னிடம் இருக்கும் தெய்வீகசக்தியை மனிதன் உணராமல் வாழ்வதில் பொருளில்லை.

* மனிதப்பிறவி விலங்கு உணர்விற்கும் தெய்வீக உணர்விற்கும் இடைப்பட்ட நிலையாகும். அதனால் தான் மனித மனங்களில் பொறாமை, காமம் போன்ற தீயகுணங்களும், அன்பு, கருணை போன்ற தெய்வீக குணங்களும் இருக்கின்றன.

* தீயகுணங்களை வளர்த்துக் கொள்ளத் துணிந்தால் அசத்தியத்தையும்,தெய்வீக குணங்களை வளர்த்துக் கொண்டால் சத்தியத்தையும் அடையமுடியும்.

* மனிதன் தனது அன்றாடக் கடன்களை முறையாக நிறைவேற்ற வேண்டும். விழித்திருக்கும் வேளையில் உறங்குவதோ, உறங்கும் வேளையில் விழித்திருப்பதோ முறையான செயல் அல்ல.

* மனிதன் முறையாக அன்றாடம் குறைந்தபட்சம் நான்குமணிநேரமாவது உறங்க வேண்டும். உறங்கும் நேரத்தில் விழித்திருப்பவர்களின் உடல்நலம் குலையத் துவங்கும். நாளடைவில் ஒழுக்கத்திலிருந்து விலகி ஒழுங்கீனமானவர்களாக மாறிவிடுவர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.